நாட்டின் முதுகெலும்பாக காணப்படும் போக்குவரத்து துறை மீது அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று(18.02) புதன்கிழமை காலை அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது மேலும் தெரிவித்த அவர்,
‘நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ள போக்குவரத்து துறையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறைய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
இந்த விடயத்தில் போக்குவரத்து அமைச்சர் நேரடியாக கள விஜயங்களை மேற்கொண்டு செயலாற்றி வருகிறார்.
வட மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையை நான் பொறுப்பெடுத்ததிலிருந்து நடைபெற்று வரும் விடயங்களை பற்றி நான் வெளிப்படுத்த விரும்புகிறேன்.
அதில் முதலாவது விடயம்,
போக்குவரத்து விதிகளை மீறுகின்ற சாரதிகள் தொடர்பில் புகார் அளிப்பதற்காக வட்ஸப் இலக்கத்தை மக்களுக்கு இலக்கத்தைப் பகிர்ந்து உள்ளோம். அதனூடாக கிடைக்கப்பெறுகின்ற புகார்களுக்கு நாங்கள் 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.
இண்டாவது விடயம் அரச மற்றும் தனியார் பேருந்துகள் எல்லாவற்றிற்கும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.
வட மாகாணத்தில் தற்போது அறுபது ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. 17 முக்கியமான இடங்களில் 17 CCTV கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.
தனியார் மற்றும் அரச பேருந்து சாரதிகள் போட்டிக்கு பேருந்துகளை செலுத்துவதனால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌரியங்களை தவிர்ப்பதற்கும் எந்தெந்த நேரத்தில் எங்கெங்கு பேருந்துகள் நிறுத்தப்பட்டு சென்றது என்பதை இலகுவாக அறிவதற்காகவும் இது உதவியாக இருக்கும்.
அத்தோடு தனியார் பேருந்து மற்றும் அரச பேருந்து சாரதிகள் நடத்துநர்களுக்கான சீருடைகளை இரண்டு வாரத்துக்குள் அறிமுகப்படுத்த உள்ளோம். FSO பிளையிங் ஸ்கொட் அணியினருக்கும் சீருடைகளை வழங்கவுள்ளோம்.
NTC வீதி அனுமதிப்பத்திரம் ஊடாக வட மாகாண எல்லைக்குள் வரும் சொகுசு பேருந்துகளையும் பிளையிங் ஸ்கொட் (FSC) பரிசோதிப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஏ 9 வீதி ஊடாக அதிகளவான பேருந்துகள் பயணிப்பதனால் குறுந்தூர சேவைகளை மேற்கொள்கின்ற பேருந்துகளின் லாபம் குறைவடைந்து வருகிறது.அது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம்.
NTC பாதை அனுமதிப் பத்திரத்தின் ஊடாக வருகின்ற பேருந்துகள் எல்லாவற்றிற்குமே தரிப்பிடங்கள் தனியாக உள்ளன. அவர்கள் அந்தந்த இடங்களில் மாத்திரமே தரித்துச் செல்ல முடியும்
ஆனால் அது நடைமுறையில் இல்லை இனிமேல் அதனை FSC ஊடாக அவதானித்து அவர்களுக்கான தண்டப் பணத்தை அறவிடும் விடயங்களை மேற்கொண்டுள்ளோம்.
அத்தோடு வட மாகாணத்தில் இருக்கிற 27 சங்கங்களையும் நான் நேரடியாக சந்தித்து கள விஜயம் மேற்கொண்டு இருக்கின்ற பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்குரிய தீர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன்.எனவே ஒரு மாத கால அவகாசத்திற்குள் நிலைமைகள் சீராகும் என நான் நம்புகிறேன்.
எங்களுக்கு இருக்கின்ற முக்கியமான பிரச்சனையானது நேர அட்டவணை இது வட மாகாண சபை இருந்த காலத்தில் போடப்பட்டது.தற்போது அந்த நேர அட்டவணையை மெருகூட்டி அமுல்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு உள்ளோம்.
அதற்காக தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்து சங்கங்களில் இருந்து மூவரைத் தெரிவு செய்து அதற்கு ஆலோசகராக பேருந்து சேவையில் பணியாற்றி ஓய்வு பெற்ற திறமை உள்ள அதிகாரிகளின் உதவிகளை நாடி அந்தந்த மாவட்டங்களுக்குரிய மாவட்டச் செயலாளர்களையும் இணைத்து ஒரு குழுவினை உருவாக்கி அதனை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியும்.
அத்தோடு ‘கிராமிய சரிய ‘சிசு சரிய என்னும் இரு திட்டங்கள் காணப்பட்டாலும் அவை நடைமுறையில் இல்லை அவற்றையும் நாங்கள் நடைமுறைப்படுத்த உள்ளோம்.
அதாவது மக்களை ஏற்றிச் செல்லக்கூடிய இடங்களில் மக்கள் இல்லாமல் சாரதிகள் அதிக நேரம் பேருந்துகளை செலுத்தினால் அதற்குரிய மானியங்கள் அரசாங்கத்தினால் வழங்கப்பட உள்ளது. அத்தோடு ‘சிசு சரிய’ திட்டத்தின் ஊடாக மாணவர்களிடம் பயணச்சீட்டுக்குரிய அரைவாசி பணம் மாத்திரம் அறவிடப்படும். இது அரச மற்றும் தனியார் பேருந்துகளிலும் நடைமுறைப்படுத்தப்படும்.
பயண போக்குவரத்து சேவை என்பது மிகவும் அத்தியாவசியமான ஒரு சேவை அதில் ஈடுபட்டு வரும் தனியார் பேருந்து உரிமையாளர்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அத்தோடு ஒரு சாரதியினை போதைப் பொருள் பாவித்து வாகனம் செலுத்துகிறாரா என்பதை சோதிப்பதற்கு பயணத்தை ஆரம்பித்த இடத்தில் சோதனைகள் நடத்துவதோடு வைத்தியசாலைகளுக்கு அருகாமையில் மற்றும் முக்கியமான பேருந்து தரிப்படங்களில் வைத்து மேற்கொள்ளப்பட வேண்டும்.
மக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த விடயங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளதற்கு அமைவாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ எனத் தெரிவித்தார்.





