வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரனின் ஏற்பாட்டில் இன்றையதினம் (27.02) வெள்ளிக்கிழமை மீனவசங்க பிரதிநிகளுடன் ஒரு விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் மன்னாரில் நீண்ட காலமாக காணப்படும் பட்டி வலை குறித்த பிரச்சனைகள் மற்றும் மீனவர்களின் இறங்குதுறை தொடர்பான பிரச்சனைகள், மற்றும் கரைவலைப் பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
முக்கியமாக வங்காலை மற்றும் பனங்கட்டுக்கொட்டு மீனவ சங்கத்திற்கிடையே காணப்படும் பட்டிவலை தொடர்பான பிணக்கு குறித்து கலந்துரையாடப்பட்டது.
இதன்போது கரைவலைத் தொழிலை இன்னும் இரண்டு மாதங்களுக்கேனும் அனுமதிக்கும்படி மீனவ சங்கத்தினர் பணிப்பாளர் நாயகம் சுசந்த ககவத்தயிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதன் போது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தெரிவிக்கையில்.
மன்னார் மாவட்ட மீனவர்கள் பெரும்பாலும் கடன் பெற்று தான் இந்த கரைவலைத் தொழில்களை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு இந்த இரண்டு மாதங்கள் தான் மீன்பாடு உள்ள மாதங்கள் இந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு பெரும்பாலும் அவர்கள் அந்தத் தொழிலை மேற்கொள்வதற்குரிய காலநிலை இருக்காது. அதன் பின்னர் அந்த கரைவலைத் தொழிலை நிறுத்துவதாக அவர்கள் கூறியுள்ளார்கள். அவர்களுடைய கோரிக்கையானது நியாயமானது எனவே அவர்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து அந்த வாய்ப்பினை வழங்க வேண்டும்.
மற்றைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் மன்னார் மாவட்ட கடற்பரப்பில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய விடயங்கள் எதுவும் இல்லை என கடற்தொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள உதவி இயக்குனர் தெரிவித்திருக்கின்றார். எனவே மக்கள் சார்பாக நான் கேட்கிறேன் இரண்டு மாதங்களுக்கு அந்த அனுமதியினை வழங்க உங்களுடைய சாதகமான கருத்தினை எதிர்பார்க்கிறேன் என்றார்.
இதன் போது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்’தெரிவிக்கையில் ,
இந்த கரைவலைப்பாடு சம்பந்தமாக கடந்த அபிவிருத்தி குழு கூட்டத்திலும் பேசப்பட்டிருந்தது.
மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரையில் இந்த கரைவலைத் தொழிலுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என மீனவர்கள் தெரிவிக்கின்றார்கள் . ஒன்றரை கிலோ மீட்டருக்கு உள்ளாக இந்த கரைவலைத் தொழிலை செய்வதனால் கடல் வளங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே அவர்களுடைய வறுமை நிலைமையை கருத்தில் கொண்டு இரண்டு மாதங்களிலும் அவர்கள் தொழில் செய்வதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கருத்து தெரிவிக்கையில்,
எமது கடற்பரப்பு இந்திய எல்லைக்கு அருகில் காணப்படுகிறமையால் எமது மீனவர்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் வாழ்கிறார்கள். அவர்கள் பணக்காரர்கள் அல்ல. கடந்த டிட்வா புயலினால் அவர்களது உடமைகள் பறிபோய் நிவாரணங்கள் வழங்கப்பட்டிருந்தது.
அவர்கள் இப்போதும் கடனாளிகளாகத்தான் இருக்கின்றார்கள்.ஆகவே இந்த சட்ட திட்டங்களை மீனவர்களுக்கு உடனடியாக நடைமுறைப்படுத்தக் கூடாது என்றார்.
இதன்போது பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவிக்கையில்,
‘கரைவலை பாடு தொடர்பாக 1984 ஆம் ஆண்டின் நியதியை உள்ளடக்கிய தொகுப்பின் ஊடாகத்தான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. இது ஒரு தரப்பினருடைய முடிவு அல்ல அனைத்து தரப்பினருடைய கருத்துக்களையும் கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள ஒரு முடிவு.
இந்த தீர்மானங்கள் தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்டவை அல்ல ஜனாதிபதியினுடைய பணிப்புரைக்கமைய அவருடைய தலைமையின் கீழ் எடுக்கப்பட்ட தீர்வு எனவே அதனை தனியாக மாற்றுகின்ற அதிகாரம் எனக்கு இல்லை.
உங்களுடைய பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டங்களிலே இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருக்கின்றது. எனவே இதனை நான் எங்களுடைய அதிகாரிகளுடன் கலந்துரையாடி இது தொடர்பான நல்ல முடிவுகளை எடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வேன் எனத் தெரிவித்தார் .
மேலதிக அரஅசாங்க அதிபர் (காணி) பீட். நிஜாகரன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில்,கடற்தொழிற் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள்,
பாராளுமன்ற உறுப்பினர்களான, ம.ஜெகதீஸ்வரன், காதர் மஸ்தான்,செல்வம் அடைக்கலநாதன், மாவட்ட கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரமேஷ் கண்ணா
திட்டமிடற் பணிப்பாளர் எச்.ஹலீம்தீன், மன்னார் பிரதேச செயலாளர். ம. காந்தீபன் மற்றும் அழைக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகள் கடற்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள்
மன்னார் மாவட்ட மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் .







