அதிகாலையில் பெண்களை ஏற்ற மறுத்த இ.போ.ச பேருந்து நடத்துநர்

229
0
Spread the love

மன்னார் நகரில் அதிகாலை வேளையில் இரண்டு பெண்களை அரச பேருந்தில் ஏற்றிச் செல்ல மறுத்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கக் கோரி மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தினால் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மன்னார் தோட்டவெளி மற்றும் பேசாலை பகுதிகளைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கடந்த 25ஆம் திகதி கொழும்பிலிருந்து தனியார் சொகுசு பேருந்தில் பயணித்து (26.02) அதிகாலை மன்னாரை வந்தடைந்துள்ளனர்.

அந்த சொகுசு பேருந்து மன்னார் நகர பேருந்து நிலையம் வரை மட்டுமே பயணம் செய்ததால், அவர்கள் தங்களது ஊருக்குச் செல்ல 26ஆம் திகதி அதிகாலை மன்னாரை வந்தடைந்த கொழும்பு–தலைமன்னார் இ.போ.ச பேருந்தில் ஏற முயன்றுள்ளனர்.

அவ்வேளையில், “தனியார் சொகுசு பேருந்தில் வந்த உங்களை இதில் ஏற்ற முடியாது” எனக் கூறி இ.போ.ச பேருந்தின் நடத்துனர் அவர்களை ஏற்ற மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகாலை நேரத்தில் மாற்று பேருந்து வசதி இல்லாத காரணத்தால், குறித்த இரண்டு பெண்களும் முச்சக்கர வண்டி மூலம் தங்களது ஊருக்கு செல்ல நேரிட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தை கண்டித்து, சம்பந்தப்பட்ட நடத்துநருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ந்து இடம்பெறுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளதை முன்னிட்டும் பொதுப் போக்குவரத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரி குறித்த கடிதம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை போக்குவரத்து சபை தலைவர் தோட்டக்காடு மன்னார் மற்றும் வடமாகாண வீதி பயணிகள் போக்குவரத்து சபை தலைவர் ஆகியோருக்கும் பிரதிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் திட்ட இணைப்பாளர் கே. மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here