பெண்களுக்கு உரிய மரியாதையை வழங்குவதே உண்மையான அஞ்சலி

27
0
Spread the love

“பெண்களுக்கு உரிய மரியாதையை வழங்குவதே இந்த மகளிர் தினத்தில் அவர்களுக்குச் செய்யக்கூடிய உண்மையான அஞ்சலியாகும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள விசேட செய்தியில் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினம் உலகளாவிய ரீதியில் 104வது முறையாகக் கொண்டாடப்படும் நிலையில், இம்முறை “அனைத்து பெண்களுக்கும் உரிமைகள், நீதி மற்றும் செயற்பாடுகள்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு அவர் தனது செய்தியை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 52 சதவீதமாக இருக்கும் பெண்கள், குடும்பப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும் இல்லத்தரசியாகவும் பெரும் பங்கினை ஆற்றுகின்றனர். எனினும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கருத்திற் கொள்ளும்போது, நீதி மற்றும் சமத்துவம் ஆகிய துறைகளில் அவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து தீவிரமான சவால்களை எதிர்கொண்டு வருவது இரகசியமல்ல. குடும்ப வன்முறை, பணியிடங்களில் எதிர்கொள்ளும் பல்வேறு மன மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்கள் மட்டுமல்லாது, செய்யும் சேவைக்கு கிடைக்கும் பலன்களிலும் இன்னும் சமத்துவமற்ற நிலை நிலவுகிறது. அதேபோல், ஒரு சிறுமியாக, இளம் பெண்ணாக, மனைவியாக, தாயாக, பாட்டியாக என்று பல்வேறு பங்குகளில் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார பிரச்சினைகளை சரியாக இனங்கண்டு, அதற்கான கொள்கைகளும் சட்ட திட்டங்களும் இயற்றுவது நாட்டின் சட்டவாக்குநரின் முக்கிய பொறுப்பு என்பதை வலியுறுத்துகிறோம். எனவே பெண்கள் குறித்த விரிவான சிந்தனை சமூகத்தில் இடம்பெற வேண்டியது இன்றியமையாதது.

அத்தகைய புதிய பார்வையிலான விமர்சன பூர்வமான பரிந்துரைகள் மற்றும் செயல்திட்டத்தின் வழி, பெண்களுக்கு உரிய உரிமைகள், நீதி மற்றும் அதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை நாம் அடையாளம் காணலாம். பெண்களுக்கு வழங்கப்படும் அக்கறையை ஆராயும்போது, அதன் வழி ஒரு நாட்டின், இனத்தின் நாகரிகத்தை காணலாம் என்று பிரபல்யமான வாசகம் கூறுகிறது. எந்தவொரு நாட்டிலும் ஆக்கங்களை படைப்பவர்கள் பெண்கள் என்பதால், அந்நாட்டின் நாகரிகத்தின் சிற்பிகள் அவர்களே என்பதை உணர்ந்து, பெண்களுக்கு உரிய மரியாதை வழங்கும் சூழலை உருவாக்க உறுதி கொள்வதே இந்த மகளிர் தினத்தில் பெண்களுக்கு செய்யக்கூடிய உண்மையான அஞ்சலியாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here