மன்னார் மீனவர்கள் கடற்தொழில் அமைச்சருடன் முக்கிய சந்திப்பு

271
0
Spread the love

மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் இடையேயான சந்திப்பு ஒன்று இன்று (08.03) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட மீனவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வன்னி பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது.

மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்கொண்டு வரும் பல்வேறு சவால்கள் பற்றி கலந்துரையாடப்பட்டு முக்கியமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாகக் கரைவலை மற்றும் சுருக்குவலைத் தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள். மற்றும் பேசாலையில் எரிபொருள் நிலையம் அமைப்பது தொடர்பிலான அனுமதிகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன் போது மீனவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அமைச்சர் அவற்றுக்கு விரைவில் தீர்வு பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளார்.

அத்தோடு ஜனாதிபதியின் வாக்குறுதிக்கு அமைவாக டிட்வா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுடைய நிவாரணக் கொடுப்பனவுகளையும் விரைவாகப் பெற்றுக் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் டிட்வா புயலினால் பாதிக்கப்பட்ட மீன்பிடி வள்ளங்கள் வலைகள் போன்றவற்றைச் சீர் செய்து கொடுப்பதற்கும் முழுமையாக பாதிக்கப்பட்ட உபகரணங்களுக்கு நட்ட ஈடு பெற்றுக் கொடுப்பதற்குமான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதாக அமைச்சர் வாக்குறுதியளித்துள்ளார்.

இதன்போது நீண்ட காலமாக புரையோடிக் கிடந்த மீனவர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு கடற்தொழில் அமைச்சரை மீனவ சமூகங்கள் சந்திப்பதற்கான ஏற்பாட்டினைச் செய்து தந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரனுக்கும், தங்களது கோரிக்கைகளை ஏற்று அவற்றை விரைவில் தீர்த்து வைப்பதாக உறுதியளித்த அமைச்சருக்கும் மீனவ சமூகத்தினர் தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.

குறித்த சந்திப்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் கலந்து கொண்டதோடு மன்னார் மாவட்டத்தின் அனைத்து மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here