இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் இன்று நாட்டிற்கு வருகை

56
0
Spread the love

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் இன்று (19.04) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இன்று வருகை தரும் இந்தியத் துணை ஜனாதிபதி நாளை (20) வரை நாட்டில் தங்கியிருப்பார்.

இந்த விஜயத்தின் போது, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான சமீபத்திய உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

இதற்கு மேலதிகமாக, பல நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ள அவர், அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களையும் சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

‘டித்வா’ சூறாவளி தொடர்பான புனர்வாழ்வு பணிகள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டங்கள் உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தி, இந்த விஜயத்தின் போது பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இந்தியத் துணை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு இன்று விசேட போக்குவரத்து ஏற்பாடுகளை முன்னெடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்படி, இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் துணை ஜனாதிபதி, அங்கிருந்து விசேட வாகன அணிவகுப்பு மூலம் காலி முகத்திடலில் உள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு வருகை தரவுள்ளார்.

அந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, இந்தியத் துணை ஜனாதிபதி குறித்த ஹோட்டலில் இருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லவுள்ளதால், அப்பகுதியிலும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், நாளை மறுதினமும் துணை ஜனாதிபதியின் வாகன அணிவகுப்பு பயணிக்கும் வீதிகளை அண்டிய பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here