இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு

51
0
Spread the love

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்களும் புலம்பெயர் இந்திய குடியுரிமை அட்டையை பெறும் வாய்ப்பை பெறுவார்கள் என இந்திய துணை ஜனாதிபதி சீ.பி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் காலி மற்றும் மாத்தளை மாவட்ட மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை நேற்று (19) குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றும் போது,

இன்று கொழும்பை வந்தடைந்தது முதல் புதிய உணர்வு ஏற்பட்டுள்ளது.

அது பக்கத்திற்கு நாட்டுக்கு சென்றுள்ளதை போல் அல்லாமல் பக்கத்து வீட்டுக்கு சென்றதை போல் உள்ளது.

இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழர் சமூகம் இருநாடுகளுக்கும் இடையில் ஓர் உறவு பாலமாக உள்ளார்கள்.

ஊட்டியில் இருந்து ஹட்டன் வரை, திருச்சியில் இருந்து தலவாக்கலை வரை, இராமநாதபுரத்தில் இருந்து றம்பொடை வரை, மதுரையில் இருந்து மஸ்கெலியா வரையான உறவு இரு நூற்றாண்டையும் கடந்துள்ளது.

இது மேலும் வலிமை பெற்று வருவது மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது.

இந்திய வம்சாவளி மக்கள் முதலில் தோட்ட வேலைக்கு வந்தார்கள். எனினும் தற்போது பல்வேறு துறைகளிலும் அவர்கள் முன்னணி பெற்றுள்ளார்கள்.

இந்த முன்னேற்றமானது இந்தியாவில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கு பெருமையாகும்.

இந்திய அரசும் இந்திய மக்களும் தங்களது இதயத்தில் இந்திய வம்சாவளி மக்களுக்கு என்றும் நிரந்தரமான இடத்தை வழங்கியுள்ளார்.

இந்தியாவினால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் இந்திய வீட்டுத் திட்டத்தின் மூன்றாம் கட்டம் உத்தியோகப்பூர்வமாக இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.

இன்று கையளிக்கப்படும் 145 வீடுகளுடன் மூன்றாம் கட்ட நிர்மாணப்பணிகளின் ஊடாக 4000 வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இதுவரை இலங்கை மக்களுக்கு 50,000 வீடுகளை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது.

மேலும் 10,000 வீடுகள் 4 ஆம் கட்டத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு வழங்கப்படும்.

இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் எப்போதும் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுப் பாலங்கள் எனவே அவர்கள் மீது தொடர்ந்தும் இந்தியா கவனம் செலுத்தும்.

பிரதமர் நரேந்திர மோடி 2017 ஆம் ஆண்டு செய்த விஜயத்தின் போது வழங்கப்பட்ட உறுதி மொழிக்கு அமைய இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன.

அனைவருக்கும் வளர்ச்சி என்ற வகையிலான திட்டத்தை இந்தியா முன்னெடுத்து வருகின்றது.

அதனை மேம்பாட்டு கூட்டாண்மையின் கீழ் இலங்கையிலும், நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை இந்திய அரசாங்கம் எடுத்து வருகின்றது.

எதிர்காலத்தில் இந்திய – இலங்கை பொருளாதார வளர்ச்சியானது புதிதாக வின்னைத் தொடும் அளவுக்கு மாற்றமடையும் என எதிர்பார்க்கின்றோம்.

ஜனாதிபதி அநுர குமாரவை சந்தித்த போதும் இதனையே வலியுறுத்தினேன்.

பல்வேறு வழிமுறைகளின் கீழ் 7 அரை பில்லியன் அமெரிக்க டொலர் உதவிகளை இலங்கைக்கு இந்தியா வழங்கி வருகின்றது.

இலங்கைக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் முதல் நாடாக இந்தியா உதவிகளை வழங்குவதில் பெருமை கொள்கிறது.

முதலாவதாக இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களும் ஓ.சி.ஐ (Overseas Citizen of India (OCI) அட்டையை பெறுவதற்கான வாய்ப்பை 6 ஆம் தலைமுறை வரை விரிவுப்படுத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக ஓ.சி.ஐ அட்டை விண்ணப்பத்திற்கான வழிமுறைகள் இந்திய அரசாங்கத்தினால் இலகுவாக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள ஆவணங்கள் குறித்த அட்டைக்கான விண்ணப்பத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

இந்திய ஆவணங்கள் இன்றி இலங்கை வந்த மக்களுக்கு இதனூடாக பெரும் நன்மை ஏற்படும். இதுவொரு வரலாற்று மைல்கல்லாகும்.

இலங்கை பெருந்தோட்ட அறக்கட்டளை ஊடாக கல்வி மேம்படுத்தலை மேற்கொள்ளவும் இந்திய அரசு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here