உள்ளூர் ‘கள் ‘ உற்பத்தியாளர்களின் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் 

32
0
Spread the love

மன்னார் மது விற்பனை நிலையங்களில் போத்தலிலே அடைக்கப்பட்ட ரசாயன கள் விற்பனை செய்யப்படுவதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அதற்கான தீர்வினை பெற்று தரும்படியும் உள்ளூர் கள் உற்பத்தியாளர்கள் நகர சபைக்கு கடிதம் மூலம் முறைப்பாடளித்திருந்த நிலையில் அது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் (28.04)செவ்வாய்க்கிழமை மன்னார் நகர சபையில் நகர முதல்வர் டேனியல் வசந்தன் தலைமையில் இடம் பெற்றது.

குறித்த கலந்துரையாடல் தொடர்பில் மன்னார் நகர முதல்வர் தெரிவிக்கையில்,

மன்னார் மது விற்பனை நிலையங்களில் போத்தலில் அடைக்கப்பட்ட ரசாயன கள் விற்பனை செய்யப்படுவதனால் தங்களுடைய கள்ளை விற்பனை செய்ய முடியாமல் நிலத்தில் கொட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அதற்கான ஒரு தீர்வினை பெற்று தருமாறும் என்னிடம் கடிதம் மூலம் தெரிவித்து இருந்தார்கள்.

எனவே ‘உள்ளூர் கள் உற்பத்தியாளர்களின் நிலையினை கருத்தில் கொண்டு, மன்னார் மது விற்பனை நிலையங்களில் காலை 10 மணியிலிருந்து இரண்டு மணி வரை போத்தலில் அடைக்கப்பட்டுள்ள கள்ளினை விற்பனை செய்வதில்லை என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

காலை 10 மணியிலிருந்து இரண்டு மணி வரையில்தான் அதிகமான கள் விற்பனை நேரம் என்பதனால், அந்த நேரத்தில் மது விற்பனை நிலையங்கள் தங்களுடைய போத்தலில் அடைக்கப்பட்ட கள்ளினை விற்பனை செய்யாது விடுவதனால் உள்ளூர் கள் உற்பத்தியாளர்கள் அந்த நேரத்தில் தங்களுடைய வியாபாரத்தின் மேற்கொள்ள முடியும். இதற்கு மது விற்பனை நிலைய உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீர்மானத்தினால் உள்ளூர் கள் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் இந்த விடயம் சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதனை நகர சபை கண்காணிக்கும்.

அத்தோடு போத்தலிலே கள்ளை அடைத்து விற்பனை செய்வதற்கான நிலையம் ஒன்று மன்னார் உயிலங்குலத்தில் உள்ளதாக என்னிடம் கூறப்பட்டது.

இந்நிலையில் உள்ளூர் கள் உற்பத்தியாளர்களின் கள்ளினை அந்த இடத்தில் விற்பனை செய்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளுமாறு உற்பத்தியாளர் சங்கத்திடம் நான் கூறியுள்ளேன்.

அவ்வாறு உள்ளூர் உற்பத்தியாளர்களின் கள்ளினை உயிலங்குளத்திற்கு எடுத்துச் சென்று போத்தலில் அடைத்து அந்த நிலையத்தில் வைத்து விற்பனை செய்வதால் மன்னாரில் உள்ள கள்ளினை மற்றைய மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யக்கூடியதாக இருக்கும். இதனால் உள்ளூர் கள் உற்பத்தியாளர்கள் நன்மை அடைவார்கள்.

வட மாகாணத்தில் எல்லா இடங்களிலும் போத்தல் கள் அடைக்கும் நிலையங்கள் உள்ளது. மன்னாரில் அது இல்லாமையாலேயே உள்ளூர் கள் உற்பத்தியாளர்கள் பாதிப்படுகிறார்கள்

எனவே உரிய அனுமதியினைப் பெற்று இதனை உடனடியாக ஏற்பாடு செய்யுமாறும் அதற்கான முதலீட்டிற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் நான் உற்பத்தியாளர் சங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.என்று தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் மது வரித் திணைகள் அதிகாரிகள் ,மன்னார் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட் மன்னார் கள் உற்பத்தியாளர் சங்க தலைவர் ,மன்னார் கூட்டுறவுச் சங்க முகாமையாளர் மன்னார் பொலிஸ் அதிகாரிகள், நகர சபை உறுப்பினர்கள் என்ன பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here