108 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு வரும் மன்னார் கோட்டையின் புனரமைப்பு வேலைகள் ஜூலை மாதத்தில் நிறைவுக்கு வரவுள்ளதாக வட மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே.விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று (28.4) செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் ஒல்லாந்தர் கோட்டை மற்றும் இயற்கை பூங்கா பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட போதே அவர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது மேலும் தெரிவித்த அவர்,
மன்னார் பிரதான பாலத்தினருகே அமைந்துள்ள இயற்கை பூங்கா வேலை திட்டங்களும் விரைவில் முடிக்கப்படவுள்ளதோடு, தலைமன்னார் மணற் தீடைகளுக்கான படகு சவாரியை முன்னெடுப்பதில் இருந்து வந்த தடைகள் முற்றிலுமாக நீங்கியுள்ள நிலையில் மீண்டும் படகு சவாரி ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு வட மாகாணத்தின் சுற்றுலாத் துறையில் உள்ள குறைகளைத் தீர்க்கும் முகமாக சிறந்த சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சேவை வழங்குனர்களை உருவாக்கும் விதத்தில் இளைஞர் யுவதிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்த அவர் இன்னும் சொற்ப காலத்தில் இலங்கையின் சுற்றுலாத் துறையில், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பாரியளவில் ஈர்க்கும் ஒரு தனித்துவமான இடமாக மன்னார் விளங்கப் போவதாக தெரிவித்தார்.
இதன்போது வட மாகாண சுற்றுலா பணியகத்தின் சபை உறுப்பினர் மொகமட் சாஜித், மன்னார் நகர சபை உறுப்பினர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர்களும் சமூகமளித்திருந்தனர்.







