இலங்கையில் புகைப்பிடித்தல் மற்றும் புகையிலை பாவனையைக் குறைப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்தும் நோக்கில், இலங்கைப் பல்கலைக்கழகங்கள், சுகாதாரத் துறைசார் நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சர்வதேச சுகாதார அமைப்புகள் ஒன்றிணைந்து விசேட கூட்டு நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளன.
பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனியின் தலைமையில் கொழும்பில் நடைபெற்ற விசேட கலந்துரையாடல் மற்றும் ஊடக சந்திப்பின் போதே, இலங்கையில் புகைப்பிடித்தலை நிறுத்துவதற்கான செயற்திட்டங்களை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
“Respire” என்ற சர்வதேச சுகாதார முன்னெடுப்பின் கீழ் இந்த விசேட திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் இலங்கையின் முன்னணி பல்கலைக்கழகங்களான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், வயம்ப பல்கலைக்கழகம் மற்றும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் ஆகிய ஐந்து பல்கலைக்கழகங்கள் இணைந்து பங்களிப்பு வழங்கியுள்ளன.
இங்கு உரையாற்றிய பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி குறிப்பிட்டதாவது
“புகையிலை நுகர்வைக் குறைப்பதென்பது வெறும் சுகாதார இலக்கு மட்டுமல்ல, அது நாட்டின் தேசிய அபிவிருத்திக்கான முக்கிய முன்னுரிமையாகும். புகையிலை பாவனையினால் ஏற்படும் நோய்கள், இலங்கையின் சுகாதாரக் கட்டமைப்பு, பொருளாதாரம் மற்றும் குடும்பங்களுக்குத் தொடர்ந்து பெரும் சுமையாக மாறி வருகின்றன.”
புகைப்பிடிப்பதைக் கைவிடுவதற்கு அறிவியல் மற்றும் சான்றுகள் அடிப்படையிலான அணுகுமுறைகளைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இந்த நிகழ்வில் நிபுணர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், எதிர்கால சந்ததியினரை புகையிலை பழக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கு, வலுவான புகையிலைக் கட்டுப்பாட்டுக் கொள்கைகள் மற்றும் கூட்டுச் செயல்பாடுகள் அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்







