18 தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்ட நபர் கைது

39
0
Spread the love

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி, சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான 18 தங்கச் சங்கிலிகளைக் கொள்ளையிட்ட நபர் ஒருவரை, மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் கொள்ளைக்காகப் பயன்படுத்திய திருடப்பட்ட 02 மோட்டார் சைக்கிள்கள், கொள்ளையடிக்கப்பட்ட 18 தங்கச் சங்கிலிகள் மற்றும் கைது செய்யப்படும் போது அவரிடமிருந்த 17 கிராம் 800 மில்லிகிராம் ‘ஐஸ்’  போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த மூன்று மாத காலப்பகுதியில் மஹரகம, ஹோமாகம, மீகொட, மிரிஹான, கொட்டாவ மற்றும் மாலபே ஆகிய பொலிஸ் பிரிவுகளில், ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள்களில் பயணித்த பெண்களின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகள், மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரால் கொள்ளையிடப்பட்டதாகப் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, அப்பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் ஹோமாகம வைத்தியசாலைப் பகுதியில் குற்றத்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபரை ஜீப் வாகனத்தால் வழிமறித்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் கடந்த மார்ச் 10 ஆம் திகதி மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு அருகில் திருடப்பட்டமை தெரியவந்துள்ளது. அந்த மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தியே குறித்த கொள்ளைச் சம்பவங்கள் அனைத்தையும் அவர் மேற்கொண்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக, கிரேன்ட்பாஸ் பகுதியில் மற்றுமொரு மோட்டார் சைக்கிளையும் அவர் திருடியுள்ளதாகவும், அந்த மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொள்ளையடிக்கப்பட்ட அனைத்துத் தங்க நகைகளையும் மஹரகம பிரதேசத்திலுள்ள ஒரேயொரு அடகு வைக்கும் நிலையத்திற்கே அவர் விற்பனை செய்துள்ளார். பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய குறித்த சந்தேக நபர், கடுமையான ‘ஐஸ்’ போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here