40 நாடுகளுக்கு இலவச விசா அனுமதி

33
0
Spread the love

குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான 30 நாட்கள் செல்லுபடியாகும் இலவச சுற்றுலா விசா வசதி இன்று (25) முதல் அமுலுக்கு வருகிறது.

அதன்படி அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஒஸ்திரியா, மலேசியா, சவூதி அரேபியா, ஜெர்மனி, நேபாளம், தென் கொரியா, பஹ்ரைன், இந்தியா, நெதர்லாந்து, ஸ்பெயின், பெலாரஸ், ​​இந்தோனேசியா, நியூசிலாந்து, ஸ்வீடன், பெல்ஜியம், கனடா, சீனா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, ஈரான், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், கஸகஸ்தான், குவைத், நோர்வே, ஓமான், பாகிஸ்தான், போலந்து, கட்டார், ரஷ்யா, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு இராச்சியம், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் பிரஜைகளுக்கு இந்த வசதி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட நாடுகளின் ராஜதந்திர, உத்தியோகபூர்வ, சேவை அல்லது சாதாரண கடவுச்சீட்டுகளைக் கொண்டுள்ள பிரஜைகள் இந்தத் திட்டத்தின் கீழ் இலவச சுற்றுலா விசாவைப் பெறுவதற்குத் தகுதி பெறுவார்கள் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், மேலே குறிப்பிடப்பட்ட 40 நாடுகளின் பிரஜைகள் மற்றும் இலங்கையுடன் இருதரப்பு பரஸ்பர ஒப்பந்தங்களைக் கொண்டுள்ள மாலைத்தீவு, சீஷெல்ஸ் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டுப் பிரஜைகளும் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இணையவழி மூலமான மின்னணு பயண அனுமதி ஒன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு பரஸ்பர ஒப்பந்தத்தின்படி, மாலைத்தீவு பிரஜைகளுக்கு இந்த இலத்திரனியல் பயண அனுமதி (ETA) மூலம் 90 நாட்களுக்கான சுற்றுலா விசா கிடைக்கும்.

அத்துடன் மேலே உள்ள 40 நாடுகளின் பிரஜைகளுக்கும் மற்றும் மாலைத்தீவு, சீஷெல்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் பிரஜைகளுக்கும் இந்த மின்னணு பயண அனுமதி முற்றிலும் இலவசமாகச் செய்து கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், சுற்றுலாப் பயணிகள் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் இலவச சுற்றுலா விசாவைப் பெற்றுக்கொள்ள முடியும் (மாலைத்தீவு பிரஜைகளுக்கு 90 நாட்கள் கிடைக்கும்). அத்துடன், 30 நாட்கள் செல்லுபடியாகும் காலப்பகுதிக்குள் இலங்கைக்கு முதன்முறையாக வருகை தந்த நாளில் இருந்து இருமுறை நாட்டிற்குள் பிரவேசிக்கும் (Double Entry) வசதியையும் பெறலாம் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த இலவச விசாவைப் பெற்றுக்கொண்டு 30 நாட்களுக்கு மேல் இலங்கையில் தங்கியிருக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், உரிய விசா கட்டணத்தைச் செலுத்தி விசா நீடிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிடப்பட்ட இலவச இலத்திரனியல் பயண அனுமதிஅனுமதிக்குத் தகுதிபெறும் நாடுகளின் பிரஜைகளைத் தவிர, ஏனைய அனைத்து நாடுகளின் பிரஜைகளும் இலங்கை இலத்திரனியல் பயண அமைப்பைக் கட்டுப்படுத்தும் சாதாரண விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டவர்கள் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here