தடைசெய்யப்பட்ட LTTE அமைப்பை மகிமைப்படுத்தும் வகையில் பாடல்களைப் பாடிய குற்றச்சாட்டில் கிளிநொச்சி, உதயநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய வாலிபர் ஒருவரை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த மே 31ஆம் திகதி சாவகச்சேரி, நாவற்குழி பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின் போதே இப்பாடல்கள் பாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணப் பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேகநபர் அந்த இசை நிகழ்ச்சியிலிருந்து நான்கு பாடல்களைத் தொகுத்து (Edit செய்து), அவை எல்.டி.டி.ஈ அமைப்பிற்கு அர்ப்பணிக்கப்பட்டதாக அல்லது ஆதரவளிப்பதாக சித்தரித்து தனது TikTok கணக்கில் பதிவேற்றியுள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் அவரது கைபேசியுடன், 1978 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 03(g) பிரிவின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து, அவரை வரும் 2026 ஜூன் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் சாவகச்சேரி பொலிஸ் தலைமையகமும் இணைந்து கூட்டாக மேற்கொண்டு வருகின்றனர்.







