உலக சுற்றாடல் தினத்தை (ஜூன் 5) முன்னிட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் மன்னார் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகாரசபை இணைந்து மன்னார் தீவின் கரையோரப் பகுதிகளில் கண்டல் தாவரங்களை நடும் சமூகப் பொறுப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர்.
இவ்வருட உலக சுற்றாடல் தினத்தின் கருப்பொருளான “Urgent Climate Action” (காலநிலை மாற்றத்திற்கான அவசர நடவடிக்கை) என்ற தொனிப்பொருளுக்கு அமைவாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி அஸாத் ஹனிபாவின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில், மன்னார் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பொறுப்பதிகாரி திருமதி எம். அன்ரிடா, கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர் அமுதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதுடன், வைத்தியசாலை ஊழியர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கரையோர சூழலைப் பாதுகாப்பதுடன், காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை குறைப்பதற்கும் கண்டல் வளங்களைப் பாதுகாப்பதற்குமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த மரநடுகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது







