உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் கண்டல் தாவர நடுகை நிகழ்வு இன்று (05.06) வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
டினோசா கண்டல் தாவர வளர்ப்பு நிலையத்தின் அனுசரணையுடன், மன்னார் மாவட்ட செயலகம், மன்னார் பிரதேச செயலகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
மன்னார் பிரதான பாலத்தின் அருகே மன்னார் யாழ்ப்பாணம் வீதியில் காலை 8.30 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளரும் அரசாங்க அதிபருமான கே. கனகேஸ்வரன் தலைமையில் அரச அதிகாரிகள், பல்வேறு திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
கடலோரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், சூழலியல் சமநிலையைப் பேணுவதற்கும், காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் குறைப்பதற்கும் கண்டல் தாவரங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் நூற்றுக்கணக்கான கண்டல் கன்றுகள் நடப்பட்டன.







