அங்குருவாத்தோட்டை, பட்டகொட பகுதியில் உரிய பதிவு மற்றும் அனுமதிப்பத்திரமின்றி இயங்கிவந்த தனியார் பராமரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 51 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில், “செனெஹச கெந்தெல்ல” எனப்படும் பராமரிப்பு நிலையத்தின் பணிப்பாளர் இசுரு அனுஷ்க பெரேரா (லொகு ஐயா) நேற்று (04) கைது செய்யப்பட்டு ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
களுத்துறை மாவட்ட செயலாளர் சுனந்த ஹேரத் தெரிவிக்கையில், குறித்த பராமரிப்பு நிலையம் எந்தவிதமான அதிகாரப்பூர்வ பதிவும் உரிமமும் இன்றி இயங்கிவந்ததாகக் குறிப்பிட்டார்.
தீ விபத்து இடம்பெற்ற வேளையில் அங்கு 71 பேர் தங்கியிருந்ததாகவும், அவர்களில் முதியோரும் விசேட தேவையுடையோரும் அடங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மாலை 5.30 மணி முதல் 6.00 மணி வரையிலான காலப்பகுதியில் தீ பரவிய நிலையில், கிராம மக்கள், தீயணைப்புப் பிரிவினர் மற்றும் பாதுகாப்புப் படையினரின் இணைந்த நடவடிக்கையால் 51 பேர் மீட்கப்பட்டனர்.
சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கையில், சில நிமிடங்களுக்குள் கட்டிடம் முழுவதும் தீப்பற்றியதாகவும், உள்ளே சிக்கியிருந்தவர்கள் உதவிக்காக அலறியதாகவும் கூறியுள்ளனர். சிலர் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருந்ததாகவும், அதனால் தப்பிக்க முடியாமல் போயிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பராமரிப்பு நிலையத்தின் நிர்வாகம் தொடர்பில் முன்னரே பல முறை முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும், 100-க்கும் மேற்பட்டோரின் கையெழுத்துடன் அதிகாரிகளிடம் மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தீ விபத்தில் உயிர் தப்பியவர்கள் முதலில் பட்டகொட ஆரம்பப் பாடசாலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு பின்னர் மாற்று நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சிலர் அவர்களது குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் பங்களிப்புடன் ஹொரணை நீதவானின் மேற்பார்வையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







