பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சமீபத்தில் கைது செய்யப்பட்ட சொல்லிசை பாடகர் சங்கீத்சனனை விடுதலை செய்யக் கோரியும் பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க கோரியும்
இன்று (11.06) வியாழக்கிழமை காலை மன்னார் நகரப் பகுதியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தமிழரசு கட்சியின் மன்னார் கிளை உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கவனயீர்ரப்பு போராட்டத்தில் தமிழரசுக் கட்சியின் மன் னார் கிளை உறுப்பினர்கள், மன்னார் சிவில் சமூக அமைப்புக்கள்,சட்டத்தரணிகள்,உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் பங்கேற்று இருந்தனர்
இதன்போது போராட்டக்காரர்கள் தெரிவிக்கையில்,
‘அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குவதாக உறுதியளித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்தும் அந்தச் சட்டம் இன்னும் நீக்கப்படவில்லை. கடந்த அரசாங்கங்களைப் போல அல்லாமல் தற்போதைய அரசாங்கமாவது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தனர். எனினும், அதற்கு மாறாக “அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம்” (Protection of the State from Terrorism Act – PSTA) என்ற புதிய சட்டத்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எங்களுக்கு பயங்கரவாதத் தடைச் சட்டமும் (PTA) வேண்டாம் அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமும் (PSTA) வேண்டாம். மக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் இந்த இரு சட்டங்களும் முழுமையாக நீக்கப்பட வேண்டும். அதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளம் பாடகரான கணேஷ் குமார் சங்கீத்சனனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் இதன்போது ஜனாதிபதியிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.







