இலங்கையின் சுகாதார சேவைகளை மேம்படுத்தி, மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவைகளை வழங்கும் நோக்கில், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவின் ஆலோசனையின் கீழ் 1,950 மில்லியன் ரூபாய் செலவில் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு 11 அதிநவீன CT ஸ்கேன் இயந்திரங்களை வழங்கும் பாரிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் பக்கவாதம், விபத்துகள், புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் இரத்த நாள நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் நிலையை மிகக் குறுகிய காலத்தில் துல்லியமாகக் கண்டறிய மருத்துவர்களுக்கு வசதி ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க மருத்துவமனைகளில் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வந்த 16-Slice CT ஸ்கேன் இயந்திரங்களுக்குப் பதிலாக, நவீன மருத்துவத் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப 64-Slice மற்றும் 128-Slice திறன் கொண்ட புதிய இயந்திரங்கள் பல கட்டங்களாக நிறுவப்பட்டு வருகின்றன.
இதன்படி, களுத்துறை போதனா மருத்துவமனை மற்றும் குருணாகல் போதனா மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் புதிய CT ஸ்கேன் இயந்திரங்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன.
மேலும், கொழும்பு தேசிய மருத்துவமனை, கண்டி தேசிய மருத்துவமனை, காலி தேசிய மருத்துவமனை மற்றும் கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் மேலும் நான்கு புதிய இயந்திரங்களை நிறுவும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை, முல்லேரியா போதனா மருத்துவமனை மற்றும் தம்புள்ளை, நாவலப்பிட்டி, சிலாபம், மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைகளுக்கும் இந்த அதிநவீன CT ஸ்கேன் இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாகாண சபை மருத்துவமனைகளையும் உள்ளடக்கிய இந்தத் திட்டத்தின் மூலம், கிராமப்புற மக்களும் கொழும்பு போன்ற பிரதான நகரங்களுக்கு செல்லாமல் தங்களது பிரதேசங்களிலேயே உயர்தர மருத்துவப் பரிசோதனைகளை எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.







