ஆறு தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டணியில் இணைவது தொடர்பில் உத்தியோகபூர்வ அழைப்பு கிடைத்தால், தமிழ்த் தேசியப் பேரவையின் மத்திய குழுவில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
கடந்த வாரம் நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூஃப் ஹக்கீம் தம்மை சந்தித்து, ஆறு கட்சிகள் இணைந்து முன்னெடுத்து வரும் முயற்சியில் தமிழ்த் தேசியப் பேரவையும் இணைந்து கொள்ள வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் ஏனைய ஆறு கட்சிகளிடமும் தாம் தெரிவித்துள்ளதாகவும், தமிழ்த் தேசியப் பேரவையை அந்த முயற்சியில் இணைத்துக் கொள்வதற்கு எவருக்கும் எதிர்ப்பு இல்லை என்றும் ரவூஃப் ஹக்கீம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்
அதே சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணனும் அங்கு இருந்ததாகவும், அவரிடமும் தமிழ்த் தேசியப் பேரவையை இந்த முயற்சியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என ரவூஃப் ஹக்கீம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தமக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டால், அது தொடர்பில் தமிழ்த் தேசியப் பேரவையின் மத்திய குழுவிடம் முன்வைத்து, அதன் பின்னர் மத்திய குழு தீர்மானம் எடுக்கும் என தாம் தெளிவுபடுத்தியதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
ஆறு கட்சிகளின் இந்த முயற்சியின் நோக்கம் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் தமக்கு இதுவரையில் முழுமையான தெளிவு கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் மாத்திரம் அந்த முயற்சியின் நோக்கங்கள் குறித்து தெளிவான புரிதலைப் பெற முடியவில்லை எனத் தெரிவித்த அவர், முதலில் குறித்த கட்சிகளுடன் கலந்துரையாடி,அவர்களின் முயற்சியின் நோக்கங்கள் தொடர்பில் தெளிவைப் பெற்றுக்கொண்ட பின்னரே,அதில் இணைவது தொடர்பில் முடிவெடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.
எனவே, உத்தியோகபூர்வ அழைப்பு கிடைத்த பின்னர்,அது தொடர்பில் மத்திய குழுவில் ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்துரையாடியதன் அடிப்படையில் தமிழ்த் தேசியப் பேரவை அந்த முயற்சியில் இணைவதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.







