முள்ளிக்குளம்–பள்ளகண்டல் அந்தோனியார் ஆலயப் பாதையை தற்காலிகமாகத் திறக்கக் கோரி அமைதிவழி கவனயீர்ப்புப் போராட்டம்

211
0
Spread the love

முள்ளிக்குளம் கிராம மக்களின் நீண்டகால மத வழிபாட்டு மரபை தொடரும் வகையில், மறிச்சுக்கட்டி–பூக்குளம் ஊடாக பள்ளகண்டல் அந்தோனியார் ஆலயத்திற்குச் செல்லும் பாதையை குறைந்தது ஐந்து நாட்களுக்கு தற்காலிகமாகத் திறந்து வழங்குமாறு வலியுறுத்தி, முள்ளிக்குளம் கிராம மக்கள் இன்று (06.07) திங்கட்கிழமை முள்ளிக்குளம் பிரதான வீதியருகே அமைதிவழி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், ஆண்டாண்டு காலமாக வழிபட்டு வந்த பள்ளகண்டல் அந்தோனியார் ஆலயத்திற்கு இந்த ஆண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பாதை மூடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவல் தங்களை மிகுந்த மனவேதனைக்குள்ளாக்கியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், தங்களது சொந்த கிராமத்தில் உள்ள ஆலயத்திற்கு சென்று நேர்த்திக்கடன்களையும் மதக் கடமைகளையும் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அவர்கள், மக்களின் வாழ்வாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு குறைந்தது ஐந்து நாட்களுக்கு மட்டுமாவது பாதையைத் திறந்து வழங்குமாறு அரசாங்கத்திடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த முள்ளிக்குளம் பரலோக மாதா ஆலய பங்குத்தந்தை அருட்பணி ரெரன்ஸ் அடிகளார், கடந்த கால யுத்தத்திற்குப் பின்னர் முள்ளிக்குளம் கிராமம் பெருமளவில் கைவிடப்பட்ட நிலையிலேயே இருப்பதாகவும், அப்பகுதி மக்களின் பூர்வீக நிலங்கள் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அவர்கள் பல்வேறு பகுதிகளில் குடியேறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும், ஆண்டுதோறும் முள்ளிக்குளம் மக்கள் பள்ளகண்டல் அந்தோனியார் ஆலயத்திற்குச் சென்று தங்களது மதக் கடமைகளை நிறைவேற்றுவது வழக்கமாக இருந்து வந்ததாகவும், தற்போது மறிச்சுக்கட்டி–பூக்குளம் பாதையை பயன்படுத்த முடியாது என சமீபத்தில் தகவல் கிடைத்ததால் மக்கள் பெரும் மனவேதனையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், இந்தப் பாதை வழியாக ஆலயத்தை அடைய சுமார் 30 கிலோமீட்டர் மட்டுமே பயணிக்க வேண்டிய நிலையில், அனுராதபுரம் வழியாகச் செல்ல வேண்டுமானால் சுமார் 250 கிலோமீட்டர் பயணிக்க வேண்டியிருப்பதாகவும், வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களுக்கு அந்த அளவிலான பயணம் பொருளாதார ரீதியாக சாத்தியமற்றதாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

எனவே, மக்களின் மத உரிமையையும் பொருளாதார சூழலையும் கருத்தில் கொண்டு, ஐந்து நாட்களுக்கு மட்டுமாவது குறித்த பாதையைத் திறந்து வழங்குமாறு அரசாங்கத்திடமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பணிவுடன் கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் முள்ளிக்குளம் கிராம மக்கள், முள்ளிக்குளம் பரலோக மாதா ஆலய பங்குத்தந்தை அருட்பணி ரெரன்ஸ் அடிகளார், மன்னார் மெஸிடோ நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிராடோ,அந்நிறுவன உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here