2000 கோடி செலவில் 22 குடிநீர் விநியோக திட்டங்கள் ஆரம்பிக்கப்படும்

153
0
Spread the love

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இன்று (10) ஆரம்பித்து வைக்க்ப்பட்டது.

அநுராதபுரம் மாவட்டத்தின் பதவிய, கெபிதிகொல்லேவ, ஹொரவப்பொத்தான மற்றும் கஹட்டகஸ்திகிலிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 67,000 குடும்பங்களுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீரை வழங்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

1990களின் பிற்பகுதியில் இருந்து இப்பகுதிகளில் பரவி வரும் சிறுநீரக நோய்க்கு சுத்தமான குடிநீர் இல்லாததே முக்கிய காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, இத்திட்டம் வெறும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மட்டுமல்ல, மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்தும் ஒரு வேலைத்திட்டம் என்றும் இங்கு சுட்டிக்காட்டினார்.

இந்தத் திட்டத்திற்கு ஆதரவளித்த ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிலையத்திற்கும், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சு மற்றும் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை ஆகியவற்றிற்கும் தமது நன்றியை குறிப்பிட்டார்.

இந்த திட்டப் பணிகளை உரிய காலத்தில் நிறைவு செய்து, அதன் பலன்களை மக்களுக்கு வழங்குவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படு வேண்டும்.

வரலாறு முழுவதும் நீர் வழங்கல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், இதுவரையில் சுமார் 60% மக்களுக்கு மாத்திரமே சுத்தமான குடிநீர் வசதி கிடைத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் அடுத்த வருடத்தில் மாத்திரம் 2000 கோடி ரூபாய் செலவில் 22 குடிநீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது.

அதன் மூலம் சுமார் 10 இலட்சம் மக்கள் பயனடைவார்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

விவசாய மக்களுக்கு சிறந்ததொரு வாழ்க்கை, சமூக மதிப்பு மற்றும் கௌரவத்தைப் பெற்றுக்கொடுப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும்.

அதற்காக, உர மானியத்தை இருமடங்காக அதிகரித்தமை, ‘டித்வா’ புயலினால் அழிவடைந்த விவசாய நிலங்களுக்கு வரலாற்றில் அதிகூடிய நட்டஈட்டுத் தொகையை வழங்கியமை, நெல் கொள்வனவுக்காக வரலாற்றில் அதிகூடிய நிதியை ஒதுக்கியமை மற்றும் பெரிய அளவிலான நீர்ப்பாசனத் திட்டங்களின் பணிகளை மீண்டும் ஆரம்பித்து விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான நீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தமை உட்பட விவசாய மக்களுக்காகக் கடந்த குறுகிய காலப்பகுதியில் கணிசமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here