மன்னார் பள்ளிமுனை பகுதியில் நேற்று (16.07)வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில், டியூஷன் வகுப்பிற்குச் செல்வதற்காக துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த 16 வயதுடைய சிறுமி காயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, 15 மற்றும் 16 வயதுடைய இரு சிறுவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், குறித்த சிறுமி பயணித்த துவிச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.குறித்த மூன்று சிறுவர்களும் மன்னாரின் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருகின்றனர்.
விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய 16 வயதுடைய சிறுவனும் காயமடைந்த நிலையில் முதலில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவரது உடல்நிலை காரணமாக மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவத்தின் போது சிறுவர்கள் இருவரும் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை எனப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தனித்துவமான ஒன்றல்ல. அண்மைக்காலமாக இலங்கை முழுவதும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனங்களை இயக்குவது, தலைக் கவசங்கள் அணியாமல் அதிக வேகத்தில் மற்றும் பொறுப்பற்ற முறையில் வாகனங்களை செலுத்துவது போன்ற காரணங்களால் பல்வேறு விபத்துகள் தொடர்ச்சியாகப் பதிவாகி வருகின்றன.
அண்மையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற பாரிய விபத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் மோதியதில் பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் இணைந்து வீதி போக்குவரத்துகளை பொலிசார் அதிசிரத்தையுடன் கண்காணிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். மேலும், பாடசாலையில் இருந்து தனது மகளை அழைத்துவரச் சென்ற இளம்தாய் ஒருவர் மீதும் மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்த சம்பவமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இவ்வாறான துயரச் சம்பவங்கள் தொடராமல் இருக்க, சிறுவர்கள் வாகனங்களை இயக்குவதன் ஆபத்துகள் குறித்து பாடசாலைகள், பெற்றோர், பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் இணைந்து விரிவான விழிப்புணர்வுச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.
குறிப்பாக, சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத சிறுவர்களிடம் வாகனங்களை ஒப்படைக்காமல் இருப்பது பெற்றோரின் முக்கிய பொறுப்பாகும். பிள்ளைகளின் செயற்பாடுகளை தொடர்ந்து கண்காணிப்பதன் மூலமும், வீதி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு விதிகளை சிறு வயதிலிருந்தே கற்பிப்பதன் மூலமும் பல உயிர்களை பாதுகாக்க முடியும்.
வீதி விபத்துகள் என்பது ஒரு குடும்பத்தின் மட்டுமல்ல, முழு சமூகத்தையும் பாதிக்கும் பேரிழப்பாகும். எனவே, இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்.







