இன்று (17.07)அதிகாலை சுமார் 12.00 மணியளவில், மன்னார் அடம்பன் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியான ஐ.பி.சந்தரூபனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவர் அடம்பன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அவசரமாக மாற்றி அனுப்பப்பட்டார்.
மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் வரும்போது அவருக்கு சுவாசம் நின்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உயிர் ஆபத்தான நிலையில் அவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் இணைந்து உடனடியாக மேற்கொண்ட தீவிர உயிர்காக்கும் சிகிச்சை மற்றும் இடைவிடாத போராட்டத்தின் பலனாக, உயிரிழந்ததாக கருதப்பட்ட அவரின் உயிர் மீட்கப்பட்டது.
இந்த அர்ப்பணிப்புமிக்க மருத்துவ சேவையால் அவர் மீண்டும் உயிர் பிழைத்த சம்பவம் மன்னார் மாவட்டம் முழுவதும் பெரும் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மரணத்தின் விளிம்பில் இருந்த ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் பணியாளர்களின் துரித நடவடிக்கை மற்றும் அர்ப்பணிப்பு சேவைக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் தங்களது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.







