தலைமன்னார் வீதியின் 200 மீட்டர் பகுதியை அகலப்படுத்த நடவடிக்கை- காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடல்

101
0
Spread the love

மன்னார் நகரில் தலைமன்னார் வீதியின் செலான் வங்கியில் இருந்து ஸ்டேடியம் சந்தி வரையிலான சுமார் 200 மீட்டர் வீதிப் பகுதியை அகலப்படுத்தும் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (25.07) சனிக்கிழமை காலை மன்னார் நகர சபையில் நடைபெற்றது.

நீண்ட காலமாக இவ்வீதிப் பகுதி மிகவும் குறுகலாகவும் சேதமடைந்த நிலையிலும் காணப்படுவதால், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பல்வேறு போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனால் குறித்த வீதியை அகலப்படுத்துமாறு மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த விடயம் கடந்த பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட நிலையில், வீதி விஸ்தரிப்புக்குத் தேவையான காணிகளின்
உரிமையாளர்களுடன் நேரடியாக கலந்துரையாடி அவர்களின் இணக்கப்பாட்டைப் பெறும் நோக்கில் இன்றைய சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கலந்துரையாடலின் போது காணி உரிமையாளர்களுடன் சாதகமான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும், அடுத்த கட்டமாக மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மன்னார் நகர முதல்வர் தெரிவித்தார்.

மன்னார் நகர முதல்வர் டேனியல் வசந்தன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் எம். பிரதீப், மன்னார் பிரதேச செயலாளர் ஏ. காந்தீபன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் சி.எம். மொராயஸ், மன்னார் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஜூட் மைக்கேல் ராஜ் ஆகியோர் கலந்துகொண்டதுடன், வீதி விஸ்தரிப்பால் பாதிக்கப்படவுள்ள காணி உரிமையாளர்களும் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here