பெங்களூருவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இரு சிறுமிகள் சடலமாக மீட்கப்பட்டதுடன், அவர்களின் தந்தை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹோட்டல் அறையில் 10 மற்றும் 5 வயதுடைய சகோதரிகளே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியிருந்த குடும்பத்தினர், குறிப்பிட்ட நேரத்தில் அறையை விட்டு வெளியே வராத நிலையில், மாலை 4 மணியளவில் ஹோட்டல் ஊழியர்கள் அறையை சுத்தம் செய்வதற்காக கதவைத் தட்டியுள்ளனர்.
எனினும், உள்ளிருந்து எந்தப் பதிலும் கிடைக்காததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் அறைக்குள் சென்று பார்த்தபோது, இரண்டு சிறுமிகளும் படுக்கையில் சடலமாக கிடந்ததை அவதானித்துள்ளனர்.
அதேவேளை, சிறுமிகளின் தந்தையான 40 வயதுடைய எஸ்.ஜி. இம்ரான், அறையின் குளியலறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதையடுத்து, ஹோட்டல் ஊழியர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு சிறுமிகளும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், அதனைத் தொடர்ந்து இம்ரான் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மனைவி தொடர்பாக ஏற்பட்ட சந்தேகமே இந்தச் சம்பவத்துக்கான காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







