வங்காள விரிகுடாவில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பிரதேசம், இன்று (21) மாலை 5.30 மணியளவில் தாழமுக்கமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள இந்த தாழமுக்கம், அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து, வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகள் ஊடாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக வங்காள விரிகுடா கடற்பரப்பில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 65 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். இடியுடன் கூடிய பலத்த மழையின் போது காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வடக்கு அட்சரேகை 5 முதல் 22 வரையிலும், கிழக்கு தீர்க்கரேகை 85 முதல் 100 வரையிலும் உள்ள கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாக அப்பகுதிகளில் இருந்து வெளியேறுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பலநாள் மீன்பிடி படகுகளில் பயணிக்கும் மீனவர்கள் இந்த எச்சரிக்கையை தீவிரமாகக் கவனத்தில் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.







