கிளிநொச்சி, இராமனபுரம் மற்றும் அக்கராயன் ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் பூட்டியிருந்த வீடுகளை உடைத்து மேற்கொள்ளப்பட்ட தொடர் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய தாயும் மகனும் கிளிநொச்சி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகள் மற்றும் தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 21 அரை (21 ½) பவுன் தங்க நகைகளும், பத்து லட்சம் (ரூ. 10,00,000) ரூபாய் ரொக்கப் பணமும் பொலிஸாரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட தாய் மற்றும் மகனிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் கிளிநொச்சி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.







