இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பதைத் தவிர்க்கும் வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு இந்திய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளமை மகிழ்ச்சியளிக்கும் விடயம் என வட மாகாண கடற்றொழில் இணையத்தின் செயலாளரும் ஊடகப் பேச்சாளருமான முகமட் ஆலம் தெரிவித்துள்ளார்.
வட மாகாண கடற்றொழில் இணையத்தின் ஏற்பாட்டில் இன்று(08) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வட மாகாண கடற்றொழில் இணையத்துடன் இணைந்து பணியாற்றுகின்ற தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் தேசிய மீனவர் தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகள் இணைந்து கடந்த திங்கட்கிழமை கடற்றொழில் அமைச்சரை சந்தித்திருந்தோம். சுமார் ஒன்றரை மணிநேரம் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலின்போது இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் அதிகாரிகள் மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகள் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் எமது பிரச்சினைகள் தொடர்பான கருத்துக்களை அமைச்சருடன் பகிர்ந்துகொண்டோம்.
தற்போது அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து மீனவர்களுடனான பேச்சுவார்த்தையும், அதன் பின்னர் அமைச்சு மட்டத்திலான பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் எங்களிடம் தெரிவித்தார்.
அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடலின்போது கடல் வளங்களைப் பாதுகாத்தல், சுற்றாடலைப் பாதுகாத்தல் மற்றும் ஏனைய மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமான முறையில் மீன்பிடிப்பதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற எங்களுடைய நிலைப்பாட்டையும் அமைச்சரிடம் தெளிவாக எடுத்துரைத்திருந்தோம்.
இந்த விடயத்தில் வட மாகாண கடற்றொழில் இணையம் பாரிய பங்களிப்பைச் செய்து வருகின்றமை அனைவரும் அறிந்ததே. இதனைத் தவிர, பல்வேறு அமைப்புகளும் மீனவர்களுக்காக குரல் கொடுத்து வருகின்றன. இந்திய மீனவர்களின் இந்த அத்துமீறிய வருகை தொடர்பிலும் பல அமைப்புகள் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகின்றன.
இந்த நிலையில், இந்திய உச்சநீதிமன்றத்தில் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பதைத் தவிர்க்கும் வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்காக குறித்த விடயத்தை கவனத்தில் எடுத்த இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு மீனவர்கள் சார்பில் எங்களுடைய மேலான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இனிமேல் கச்சத்தீவு விவகாரத்தை வைத்து தமிழ்நாட்டில் எந்தவொரு அரசியல்வாதியும் அரசியல் செய்யக்கூடாது” என அவர் மேலும் தெரிவித்தார்.







