யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாகத் தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இடைக்கால அறிக்கையில், ‘பெரும் புதைகுழி’ என்ற சொற்றொடர் வேண்டுமென்றே திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளதாகக் கூறிப் பாதிக்கப்பட்ட தரப்புச் சட்டத்தரணிகள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரமொன்றைத் தாக்கல் செய்துள்ளனர். கடந்த 22.10.2026 அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆரம்ப அறிக்கைகளில் ‘பெரும் புதைகுழி’ (Mass Grave) என்ற பதப் பிரயோகம் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அது விடுபட்டிருப்பது கடுமையான சந்தேகங்களை எழுப்புவதாகச் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த பகுதியை வழக்கமான அடக்க இடமாகக் கருதுவதற்குரிய அடிப்படையான மயானப் பதிவுகள், நிலப் பயன்பாட்டு வரலாறு மற்றும் தடயவியல் ஆவணங்கள் குறித்து அந்த அறிக்கை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர். மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள ஆழம், பரவல் நிலை மற்றும் மண் அடுக்குகளின் தன்மை போன்ற அறிவியல் பூர்வமான அவதானிப்புகள் வழக்கமான அடக்கத்துடன் எவ்வாறு பொருந்தும் என்பது குறித்தும், அதற்கான ஒப்பீட்டுச் சான்றுகள் எவை என்பது பற்றியும் விரிவான விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என அந்த நகர்த்தல் பத்திரத்தில் பலமான வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.







