யாழ்ப்பாண நகரை அண்மித்த பகுதிகளில் வன்முறைச் செயல்கள் மற்றும் சட்டவிரோதமாக மீட்டர் வட்டி வசூலிப்பில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள இளைஞர் குழுவைச் சேர்ந்த ஆறு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குழுவினர் பொதுமக்களை அச்சுறுத்தி வட்டிப் பணத்தை வசூலித்ததுடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறையைப் பின்பற்றாமல் எரிபொருள் பெற்றுச் சென்றதாகவும், அங்குள்ள ஊழியர்களை அச்சுறுத்தியதாகவும் பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதனையடுத்து, பொலிஸார் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது ஆறு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவருக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும், விசாரணைகளுக்கு முன்னிலையாகாத காரணத்தால் அவர்களுக்கு எதிராக திறந்த பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆறு பேரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த குழுவின் தலைவராகச் சந்தேகிக்கப்படும் நபர் உள்ளிட்ட ஒன்பது பேர் கடந்த மாதம் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது பெருந்தொகைப் பணத்துடன் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டி வசூலிப்பு மற்றும் அதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அச்சுறுத்தல், வன்முறைச் சம்பவங்கள் குறித்து பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.







