முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ, ரிமாண்ட் உத்தரவின் பேரில் வெலிக்கடை மேகசின் சிறைச்சாலையில் பெண்கள் பிரிவில் விசேட பாதுகாப்புக்கு மத்தியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரச வங்கியொன்றில் பெறப்பட்ட 10 மில்லியன் ரூபாய் நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில், லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட ஷிராந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 13ஆம் திகதி வரை ரிமாண்ட் செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (07) உத்தரவிட்டது.
அத்துடன், சிகிச்சைக்காக அவரை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பல்லேதன்ன தெரிவித்துள்ளார்.







