அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் உள்ள பௌத்த விஹாரையில் ஆறு சிறுமிகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக இலங்கையில் பிறந்த 71 வயதுடைய பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மெல்பேர்னின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள தம்ம சரண விகாரையின் முன்னாள் தலைமைத் துறவியான நாவதுன்ன விஜித என்பவருக்கே விக்டோரியா மாகாண மாவட்ட நீதிமன்றம் இந்தத் தண்டனையை வழங்கியுள்ளது.
1994 முதல் 2002ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் Springvale மற்றும் Keysborough பகுதிகளில் இயங்கிய விஹாரைகளில் இந்தக் குற்றங்கள் இடம்பெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமய நடவடிக்கைகளுக்காக தங்கள் குடும்பத்தினருடன் விஹாரைக்கு வந்த சிறுமிகளை, பெற்றோர் அருகிலுள்ள அறைகளில் இருந்த சந்தர்ப்பங்களில் தனது தங்குமிடத்துக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு நடைபெற்ற விசாரணையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ஊடுருவல் தொடர்பான. 9 குற்றச்சாட்டுகள் மற்றும் ஒழுக்கக்கேடான 8 செயல்கள் என மொத்தம் 17 குற்றச்சாட்டுகளில் விஜித குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
விஜித குற்றச்சாட்டுகளை மறுத்து வழக்கை எதிர்கொண்டிருந்தார். சில முறைப்பாட்டாளர்களைத் தனக்கு நினைவில் இல்லை என்றும் அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வாதிட்டிருந்தனர்.
இந்தக் குற்றங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீண்டகால மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக நீதிபதி பர்தீப் திவானா தெரிவித்துள்ளார். மேலும், துறவியாகவும் சமூகத்தில் மதிப்புமிக்க நபராகவும் இருந்த விஜித, தன் மீது வைக்கப்பட்டிருந்த நம்பிக்கையை மோசமாக துஷ்பிரயோகம் செய்துள்ளதாக நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
விஜித 9 ஆண்டுகள் மற்றும் 4மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவித்த பின்னரே பிணையில் விடுதலை பெறுவதற்குத் தகுதி பெறுவார்.
சிறைத்தண்டனை நிறைவடைந்த பின்னர் அவர் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட இருப்பதாகவும், அவர் ஸ்வீடனுக்குத் திரும்பத் தயாராக இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜித இலங்கையில் பிறந்து தனது 15ஆவது வயதில் பௌத்த துறவியாகிய பின்னர் ஸ்வீடனுக்குச் சென்று குடியுரிமை பெற்றதாகவும், 1994ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்குச் சென்று தம்ம சரண விஹாரையின் தலைமைத் துறவியாகப் பொறுப்பேற்றதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







