யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்கரை மற்றும் சுற்றுலா மையப் பகுதியில் தீபாவளி பண்டிகையைக் குறிவைத்துத் திட்டமிடப்பட்டிருந்த இரவு நேரக் கொண்டாட்டங்கள் மற்றும் களியாட்ட நிகழ்ச்சிகளுக்கு வேலணை பிரதேச சபை திட்டவட்டமாகத் தடை விதித்துள்ளது. கடந்த 22.10.2026 அன்று இடம்பெற்ற சபை அமர்வின்போதே இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளித் திருநாளை முன்னிட்டு மண்டைதீவுப் பகுதியில் இரவு நேரக் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாகச் சமூக வலைதளங்களில் பரவிய காணொளிகள் மற்றும் தகவல்கள் குறித்து சபையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அப்போது கருத்துத் தெரிவித்த தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார், குறித்த நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு எவரும் சபையிடம் இதுவரை முறையான அனுமதியைப் பெறவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். இதனைத் தொடர்ந்து, அப்பகுதியின் அமைதியைப் பேணவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அத்தகைய இரவு நேரக் கொண்டாட்டங்களுக்கு எவ்வித அனுமதியும் வழங்கப்படக்கூடாது என உறுப்பினர்கள் ஒருமித்த குரலில் வலியுறுத்தினர். அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதேச சபை, மண்டைதீவு சுற்றுலாப் பிரதேசத்தில் இரவு நேரக் களியாட்டங்களை நடத்துவதற்குத் தடை விதித்து உத்தியோகபூர்வமாகத் தீர்மானித்துள்ளது.







