ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப (IT) அமைப்புகள் மீது இணையத் தாக்குதல் (Cyberattack) நடத்தப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை அந்த நிறுவனம் முற்றிலுமாக மறுத்துள்ளது.
தங்களது பிரதான கணினி மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியான உடனேயே, நிறுவனம் சார்பாக உடனடியாக தொழில்நுட்ப மதிப்பீடுகளும் அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக தேசிய விமான சேவையகம் தெரிவித்துள்ளது. உள்நுழைவுகள் மூலம் தரவுகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை எனவும், ஹேக்கர்களின் கட்டுப்பாட்டுக்குள் அமைப்புகள் செல்லவில்லை எனவும் ஆரம்பகட்ட மற்றும் தொழில்நுட்ப விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மின்னஞ்சல் சேவைகள் உட்பட அனைத்துப் பிரதான சேவைகளும் எத்தகைய தடையுமின்றி தொடர்ச்சியாக இயங்கி வருவதாகவும், ரேன்சம்வேர் (Ransomware) ஊடாக பிட்காயின் அல்லது அமெரிக்க டாலர்களில் எவ்வித பணமும் கோரப்படவில்லை எனவும் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. விமானங்களின் செயற்பாடுகளுக்கோ அல்லது பயணிகளுக்கான சேவைகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.







