செம்மணி புதைகுழி விவகாரம் – சர்வதேச விசாரணை அவசியமென சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தல்!

47
0
Spread the love

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் தொல்பொருள் ஆய்வாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை பல சந்தேகங்களை எழுப்புவதாகவும், இதற்கு நீதி கிடைக்கவேண்டுமானால் முறையான சர்வதேச விசாரணை ஒன்று அவசியமானது என்றும் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கடுமையாக வலியுறுத்தியுள்ளார். இது குறித்த ஊடக அறிக்கை ஒன்று நேற்று (21.10.2026) வெளியிடப்பட்டுள்ளது.

செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 2026 ஆம் ஆண்டிலும் நீண்ட நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகளின் போது 583 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்ட போதிலும், பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. இதற்கிடையில், ஆய்வாளர்களான பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் அனுஷா வன்னிநாயக்க ஆகியோர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், இந்தக் குழிப் பதிவுகள் இயற்கை அனர்த்தங்கள் அல்லது தொற்றுநோய்கள் காரணமாக உயிரிழந்தவர்களுடையதாக இருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டிருப்பது முரண்பாடானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆழிப்பேரலை மற்றும் கொவிட் பெருந்தொற்றுக் கால உயிரிழப்புகள் தொடர்பான உத்தியோகபூர்வப் பதிவுகள் அரசிடம் உள்ள நிலையில், செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களில் துப்பாக்கிச் சன்னங்கள் மற்றும் வெட்டுக் காயங்கள் பதிவாகியுள்ளதாக வெளிவந்த தகவல்களை அவர் நினைவுகூர்ந்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற யுத்த காலத்தின் போது காணாமல் போனோர் விவகாரத்துடன் இணைத்துப் பார்க்கப்பட வேண்டிய இப்பிரச்சினையில், தற்போதைய அரசாங்கமும் முந்தைய ஆட்சியாளர்களைப் பாதுகாக்கும் போக்கைக் கடைப்பிடிப்பதாகத் தோன்றுவதாகவும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உண்மையான நீதி கிடைக்க சர்வதேச விசாரணை மட்டுமே ஒரே வழி என்றும் அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here