யாழ்ப்பாணம், சங்கானை மற்றும் மல்லாகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து 15 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துவிட்டு, முன்னாள் வங்கி அதிகாரி ஒருவர் வெளிநாட்டுக்குத் தப்பியோடியுள்ளதாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இது தொடர்பான விரிவான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

பிரபல நிதி நிறுவனமான ‘Mercantile Investment PLC’ மற்றும் ‘Cargills Bank’ ஆகியவற்றில் உயர் பதவிகளில் பணியாற்றியுள்ள குறித்த நபர், வங்கித் துறையில் தனக்கிருந்த அனுபவத்தையும் வாடிக்கையாளர்கள் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையையும் பயன்படுத்தி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். வைப்புத் தொகைகள் மற்றும் கடன்கள் வழங்குவதாகக் கூறி பொதுமக்களிடம் இருந்து பல கட்டங்களாகப் பெறப்பட்ட இத்தொகை 15 கோடி ரூபாயைத் தாண்டும் எனத் தெரியவந்துள்ளது. இவரது குடும்பத்தினரும் நிதித்துறையுடன் தொடர்புடையவர்கள் என்பதால் பொதுமக்கள் இவர் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர். இதற்கிடையில், யாழ்ப்பாணத்தில் உள்ள கார்கில்ஸ் வங்கி கிளையில் பணியாற்றிய காலத்தில், உயிரிழந்த வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கடந்த செப்டம்பர் 21 ஆம் திகதியன்று அவர் காணாமல்போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, அடுத்த நாளான செப்டம்பர் 22 ஆம் திகதி Mercantile Investment நிறுவனத்திற்குச் சென்ற அவரது தந்தை அங்கிருந்து கடவுச்சீட்டைப் பெற்றுச் சென்றுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்ட அதே நாளில் அவர் இந்தியா வழியாகச் சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ள நண்பர்களிடமிருந்தும் அவர் பெருந்தொகைப் பணத்தைக் கடனாகப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. தன் வாழ்நாள் சேமிப்பையும் பணத்தையும் பறிகொடுத்துவிட்டு நதிமூலம் தேடி அலையும் பொதுமக்கள், உடனடியாக பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து, தமக்கு உரிய நீதியைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.







