Clean Sri Lanka – Clean Colombo திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விசேட கலந்துரையாடல்!

71
0
Spread the love

‘Clean Sri Lanka’ – ‘Clean Colombo’ திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இத்திட்டத்தின் கீழ் மலசலக்கூடக் கட்டமைப்புகள் மற்றும் நீர்ப்பாசனக் கால்வாய்களைப் புனரமைத்தல், மேம்படுத்துதல், சுற்றுச்சூழலை அழகுபடுத்துதல், கழிவு முகாமைத்துவத்தை முறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன்போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் செயற்பாட்டுத் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

கொழும்பு மாநகர சபை, இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், நகர அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் இலங்கை ரயில்வே திணைக்களம் ஆகியன இத்திட்டத்துடன் தொடர்புடைய பிரதான நிறுவனங்களாகும்.

இந்நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

மேலும், ‘Clean Sri Lanka’ திட்டத்தின் கீழ் சமூக நல்வாழ்வு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் ஒழுக்க விழுமியங்களின் மறுமலர்ச்சி ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, பொதுமக்களின் நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை, கொழும்புக்கான திட்டங்களுடன் இணைத்து ‘Clean Colombo’ திட்டத்தின் கீழ் ஒருங்கிணைப்பதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில், ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளரும் ‘Clean Sri Lanka’ செயலகத்தின் பிரதிநிதியுமான எஸ்.பி.சி. சுஜீஸ்வர, கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் ஹேமந்த வீரக்கோன் உள்ளிட்ட மாநகர சபையின் பிரதிநிதிகள், முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், நகர அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், இலங்கை ரயில்வே திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here