யாழ்ப்பாணம் கீரிமலைப் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கற்குவாரியில் கொட்டப்பட்ட பெருமளவிலான கழிவுகள் முழுமையாக அகற்றப்படாததால், அப்பகுதி நிலத்தடி நீர் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கீரிமலை கற்குவாரியில் வலி. தெற்கு பிரதேச சபையினால் அனுமதியின்றிக் கழிவுகள் கொட்டப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள், வடமாகாண ஆளுநர் மற்றும் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன், அங்கு கொட்டப்பட்ட கழிவுகளை உடனடியாக அகற்றுமாறும் உத்தரவிட்டுள்ளனர். எனினும், அந்த உத்தரவின் பின்னர் சிறிய அளவிலான கழிவுகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாகவும், பெருமளவிலான கழிவுகள் இன்னும் அங்கேயே காணப்படுவதாகவும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் பருவமழை ஆரம்பித்துள்ளதால் அண்மைய நாட்களில் பெய்துவரும் கனமழையால் கற்குவாரிக் குழிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. கழிவுகளுடன் இந்த நீர் கலந்திருப்பதால், சுற்றியுள்ள பகுதிகளின் நிலத்தடி நீர் மாசடையக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தின் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு, கழிவுகள் கொட்டப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக விசேட விசாரணைக் குழுவொன்றை அமைக்க வேண்டும் என வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், எஞ்சியுள்ள கழிவுகளை அகற்றி, சுற்றுச்சூழலுக்கும் பொதுமக்களின் குடிநீர் வளங்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.







