தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு வலயம் தீவிரமடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பான வானிலை எச்சரிக்கை அறிக்கைகள் இன்று (01.11.2026) வெளியிடப்பட்டுள்ளன.
இன்று காலை நிலவரப்படி வட அட்சரேகை 11.5°N மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 86.4°E பகுதியில் நிலைகொண்டிருந்த இந்தத் தாழ்வு மண்டலம், மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று நண்பகலில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்றுள்ளது. தொடர்ந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடையும் இப்புயல், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (03.11.2026) காலை வேளையில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன், பலத்த இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும் என்பதால் கடல் பகுதி மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். இதனால் அட்சரேகை 10N – 15N மற்றும் தீர்க்கரேகை 80E – 90E எல்லைகளுக்குட்பட்ட ஆழ்கடல் பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரும் வரை கடற்றொழிலாளர்களும் கடற்படையினரும் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கடுமையாக எச்சரித்துள்ளது. ஏற்கனவே அத்தகைய ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள கப்பல்கள் மற்றும் படகுகள் உடனடியாகப் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி நகருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.







