வாழ்க்கைத் திறன்களையும் பாடசாலைகள் வளர்க்க வேண்டும் பிரதமர்

18
0
Spread the love

பாடசாலைகள் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொடுக்கும் கல்வி நிலையங்களாக மாத்திரமன்றி, தலைமைத்துவம், குழு உணர்வு மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான பண்புகளை மாணவர்களிடம் வளர்க்கும் இடங்களாகவும் திகழ வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கோட்டை ஆனந்த சாஸ்திராலயத்தின் வருடாந்தப் பரிசளிப்பு விழாவில் நேற்று (31) கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் வழங்காமல், விளையாட்டு, கலை மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திறமைகளை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, உயர்தர வகுப்புகளில் கல்வி பயிலும் ஆண் மாணவர்கள் பாடசாலைக் கல்வி முறையிலிருந்து படிப்படியாக விலகிச் செல்வது தொடர்பிலும் பிரதமர் கவலை வெளியிட்டுள்ளார். இந்த நிலைமைக்கான காரணங்களை ஆழமாக ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளை அடையாளம் காண வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளைகளுக்குத் தேவையான அன்பு, பாதுகாப்பு மற்றும் சமூகத்தில் வெற்றிகரமாக வாழ்வதற்கான திறன்களைப் பாடசாலைகள் வழங்க வேண்டும் என்றும், மாணவர்களைத் தொடர்ந்து பாடசாலைகளில் தக்கவைத்துக்கொள்ளக்கூடிய கவர்ச்சிகரமானதும் ஆதரவானதுமான கற்றல் சூழலை உருவாக்குவது கல்விக் கட்டமைப்பின் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய உலகில் அறிவு, தொழில்நுட்பம் மற்றும் தொழில்வாய்ப்புத் துறைகள் வேகமாக மாறிவருகின்றன. எனவே, மாணவர்களின் வாழ்க்கை புத்தக அறிவு அல்லது டிஜிட்டல் சாதனங்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படக் கூடாது எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தையும் சமூகத்தைப் புரிந்துகொள்ளும் ஆற்றலையும் மாணவர்களிடம் வளர்க்க வேண்டியது அவசியம் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here