வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள “முரசு” (Murasu) சூறாவளி தீவிர சூறாவளிப் புயலாக வலுப்பெறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நவம்பர் 1ஆம் திகதி இரவு 11.30 மணியளவில், குறித்த புயல் காங்கேசன்துறைக்கு வடக்கு – வடகிழக்கே சுமார் 480 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயல் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த சில மணித்தியாலங்களில் தீவிர சூறாவளிப் புயலாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையான காலப்பகுதியில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கடற்கரையில் நெல்லூருக்கும் நர்சாபூருக்கும் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், 10°N–17°N மற்றும் 80°E–90°E எல்லைக்குட்பட்ட ஆழ்கடல் பகுதிகளுக்கு மறுஅறிவித்தல் வரை மீனவர்களும் கடற்படையினரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், மன்னாரிலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான ஆழமற்ற மற்றும் ஆழ்கடல் பகுதிகளுக்கும் மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். தென்மேற்கு அல்லது தெற்கு திசையிலிருந்து மணிக்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் இடைக்கிடையே மணிக்கு 40 முதல் 45 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பான நிலையை அடையக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, பொதுமக்களும் மீனவர்களும் வானிலை முன்னறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானித்து, பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.







