நாட்டின் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளமை மற்றும் சாதகமான மழைவீழ்ச்சி முன்னறிவிப்புகள் காரணமாக, நடப்பாண்டின் இறுதிக் காலாண்டுக்கான மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கவேண்டிய அவசியமில்லை எனத் தேசிய அமைப்புக் கட்டுப்பாட்டகம் (National System Operator) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஆரம்பத்தில் சுமார் 4.4 பில்லியன் ரூபாய் வருமானப் பற்றாக்குறை இருப்பதாகத் தெரிவித்து இறுதி மூன்று மாதங்களுக்கு 2.88 சதவீத மின்சாரக் கட்டண உயர்வை வழங்குமாறு அந்நிறுவனம் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், ஆணைக்குழு 1.46 சதவீத கட்டணத் திருத்தத்திற்கு மாத்திரமே அனுமதி வழங்க முடியும் எனத் தெரிவித்திருந்ததுடன், இது தொடர்பான பகிரங்கப் பங்குதாரர் கலந்தாலோசனை நேற்று (04) இடம்பெற்றது.
இந்தக் கலந்தாலோசனையின்போதே தமது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ள கட்டுப்பாட்டகம், மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளது. நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பதன் ஊடாகச் செலவு குறைந்த நீர்மின் உற்பத்தியை அதிகரித்து, அதிக செலவுமிக்க அனல் மின் உற்பத்திக்கான தேவையைப் பெருமளவு குறைத்துக்கொள்ள முடியும் என்பதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களின் கருத்துக்களைப் பெற்று மேற்கொள்ளப்பட்ட இந்த ஆலோசனைகளைத் தொடர்ந்து, இறுதிக் காலாண்டுக்கான மின்சாரக் கட்டணம் குறித்த உத்தியோகபூர்வ இறுதித் தீர்மானத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மிக விரைவில் அறிவிக்கவுள்ளது.







