கொழும்பை மையமாகக் கொண்டு செயற்படும் மெட்ரோ பேருந்து சேவையை கண்டி, காலி மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிரதான நகர்ப்பகுதிகளுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்தும் போதே அவர் இந்த முக்கியப் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டங்களை வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய, சீன அரசாங்கத்தின் நன்கொடையாகக் கிடைக்கும் 100 மின்சாரப் பேருந்துகளைச் சேவையில் இணைப்பதுடன், அதற்கான டிப்போக்கள் மற்றும் மின்னேற்றும் வசதிகளை ஏற்படுத்த 4,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே அனுமதிப் பத்திரம் பெற்றுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்களைத் தாழ்தளப் பேருந்துகளை (Low-floor buses) இயக்க ஊக்குவிப்பதன் மூலம் இத்திட்டத்தில் தனியார் துறையையும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெடுந்தூரப் பயணிகளுக்காக 600 குளிரூட்டப்பட்ட பேருந்துகளை இறக்குமதி செய்யவும், மலைநாட்டு கிராமியப் பகுதிகளுக்கு 50 சிறிய பேருந்துகளைக் கொள்வனவு செய்ய 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்







