நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவிவந்த சீரற்ற மற்றும் தீவிரமான மழையுடனான வானிலை இன்றைய தினம் (13) தற்காலிகமாகக் குறையும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இருப்பினும், கிழக்கு மாகாணம் மற்றும் முல்லைத்தீவு, பொலன்னறுவை மாவட்டங்களின் சில பகுதிகளில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனுடன் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறும், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.







