நாட்டின் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் மீது விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரிகளைக் குறைப்பது தொடர்பான உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றிய உரையின்படி, குறித்த வரிக் குறைப்பு நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் நெத்தலி கருவாடு கிலோகிராம் ஒன்றுக்கு இதற்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த 100 ரூபாய் வரி தற்பொழுது 10 ரூபாவாகவும், மாசி கிலோகிராம் ஒன்றுக்கு இருந்த 202 ரூபாய் வரி 10 ரூபாவாகவும் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளன. மேலும், நுகர்வோரின் சுமையைக் குறைக்கும் வகையில் தூளாக்கப்பட்ட மற்றும் தூளாக்கப்படாத காய்ந்த மிளகாய் கிலோகிராம் ஒன்றுக்கான விசேட பண்ட வரியும் 50 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







