பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதியரசர்களான பி. குமாரன் ரத்னம் மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர் ஓராண்டு தடுப்புக் காவலுக்குப் பின்னர் கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும், ஓராண்டு கடந்த நிலையில் பிணை கோரிக்கையைப் பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதாகவும் பிள்ளையான் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர த சில்வா வாதிட்டார். மனுவில் சில விடயங்கள் திருத்தப்பட வேண்டும் என அரச சட்டத்தரணி சுட்டிக்காட்டியதையடுத்து திருத்தப்பட்ட மனுவைச் சமர்ப்பிக்க மனுதாரர் தரப்பு இணக்கம் தெரிவித்த நிலையில், மனு தொடர்பான ஆட்சேபனைகள் இருப்பின் ஜனவரி 18 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.







