மாவீரர் வாரத்தின் முதலாவது நாளான நேற்று (21) காலை வல்வெட்டித்துறையில் உள்ள முதல் மாவீரர் லெப்டினன்ட் சங்கரின் இல்லத்தின் முன்பாகச் சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த் தேசியக் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினரும் வடமராட்சி அமைப்பாளருமான வி. கவிச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவீரர் பண்டிதரின் தாயார் மகேஸ்வரி அம்மா நினைவுச் சுடரை ஏற்றி வைத்து மலர் தூவி வணக்கத்தைச் செலுத்தியதைத் தொடர்ந்து, வல்வெட்டித்துறை பதில் நகரபிதா நா. பத்மநாதன், நகர சபை உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். முன்னதாக மறைந்த சிரேஷ்ட அரசியல்வாதி எம்.கே. சிவாஜிலிங்கத்தின் தலைமையில் மாவீரர் வாரத்தின் முதல் நாளில் சங்கரின் இல்லத்தில் இந்த அஞ்சலி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.







