ESFD இன் ஏற்பாட்டில், சிறுபான்மைக் குழுவின் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கிடையேயான வட்டமேசைக் கலந்துரையாடல் (video)

85
0
Spread the love

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின்(ESFD) ஏற்பாட்டில் ஓரங்கட்டப்பட்ட சிறுபான்மை குழுக்களின் அரசியல் பிரசன்னம் மற்றும் சவால்கள் தொடர்பான வட்டமேசை கலந்துரையாடல்  ஒன்று இன்றைய தினம்(14.07) திங்கட்கிழமை  மன்னார் ஜூலி விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது.

குறித்த கலந்துரையாடலில், பெண்கள் ,இளைஞர்கள் மற்றும் சிறுபான்மைக் குழுவினர் உள்ளூராட்சி மன்றங்களில் பிரதிநிவத்துவமற்ற வகையில் ஓரங்கட்டப்படுகின்றமை, மற்றும் விளிம்புநிலைச்  சமூகத்தினரின் தீர்க்கப்படாத பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடியதுடன்,

எதிர்காலத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் வினைத்திறன் மிக்க செயற்பாடுகளால் அவை எவ்வாறு குறைக்கப்படலாம் அல்லது களையப் படலாம் என்பது பற்றியும் எதிர்காலத்தில்  உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் இவ்வாறான குழுக்களை இணைத்துக் கொண்டு எவ்வாறு செயற்படலாம் என்பது பற்றியும் விரிவாகக்  கலந்துரையாடப்பட்டது.

குறித்த கலந்துரையாடலின் முடிவில் கிழக்கு சமூக அபிவிருத்தி மையம் (EFSD)ஓரம் கட்டப்பட்ட சிறுபான்மை குழுக்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து தயாரித்த பரிந்துரைகளோடு கூடிய பரப்புரைப்  பத்திரம் ஒன்றினை நிகழ்வில் பங்கு பற்றிய உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள்  மற்றும் உபதவிசாளர்களிடம் கையளித்ததோடு,

எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திச் செயற்பாடுகளில் இவ்வாறான சிறுபான்மைக் குழுக்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்க  வேண்டும் என்ற  கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மேரி ஜோசப் சாந்த சீலன், புகாரி முஹம்மட் நிறைவேற்று இயக்குனர் கிழக்கு, சமூக அபிவிருத்தி நிறுவனம். ரஞ்சன் வடிவேல் திட்ட இணைப்பாளர் மன்னார் கிழக்கு சமூக அபிவிருத்தி நிறுவனம். மன்னார்  மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் உபதவிசாளர்கள், சிறுபான்மைக் குழுக்களின் பிரதிநிதிகள்,ஆகியோர் கலந்து கொண்டனர்.