யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில், உறவினர் வீட்டில் நடைபெறவிருந்த கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்பதற்காக முன்கூட்டியே எடுத்து தயார் செய்து வைக்கப்பட்டிருந்த சுமார் 28 பவுண் தங்க நகைகள் களவாடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உரும்பிராயைச் சேர்ந்த குடும்பத்தினர், மறுநாள் காலை விழாவுக்கு செல்லும் நோக்கில் நகைகள் மற்றும் ஆடைகளை முன்கூட்டியே எடுத்து தயார் செய்து வைத்துவிட்டு இரவு உறங்கச் சென்றுள்ளனர்.
அடுத்த நாள் காலை எழுந்து பார்த்தபோது, ஆடைகள் கலைக்கப்பட்டிருந்ததுடன், தாலிக்கொடி உள்ளிட்ட சுமார் 28 பவுண் தங்க நகைகள் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, சம்பவம் தொடர்பில் வீட்டார் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸார், நகை திருட்டு தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







