மன்னார் நகர சபையின் கன்னி அமர்வு கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்றபோது சபையில் தொடர்ந்தும் உறுப்பினர்களுக்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு வந்த நிலையில் சபை முதல்வரினால் சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த அமர்வின் தொடர்ச்சியாக இன்றைய தினம் வியாழக்கிழமை (17) காலை 9.30 மணிக்கு தவிசாளரினால் மீண்டும் சபை கூட்டப்பட்டது.
இதன்போது சபையின் குழுக்களுக்கான நியமனத்தை தவிசாளர் டேனியல் வசந்தன் அறிவித்தபோது, முன்னாள் தவிசாளரும் தற்போதைய நகர சபை உறுப்பினருமான அன்ரனி டேவிட்சன் கடந்த கூட்ட அறிக்கை ஏன் வாசிக்கப்படவில்லை என்று தவிசாளரிடம் வினவியபோது, அது வாசிக்கப்படத் தேவையில்லை என்று தவிசாளர் பதிலளித்த நிலையில், இருவருக்கும் இடையே கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இதன்போது,சபை நாகரிகம் இன்றி இருவரும் ஒருவரை ஒருவர் கடும் வார்த்தைகளால் விமர்சித்துக் கொண்டனர்.
இதனால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. இருப்பினும், புதிய செயலாளருக்கு காசோலையில் ஒப்பமிடும் அனுமதி மக்களினால் தீர்மானிக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதி, ஒப்பந்த அடிப்படை மற்றும் நிரந்தரமாகக் கடமையாற்றுகின்ற ஊழியர்களின் சம்பளம் வழங்குதல் ஆகியவற்றுக்கான அனுமதி தவிசாளரால் முன்மொழியப்பட்ட நிலையில் சபையில் ஒரு சிலரால் வழிமொழியப்பட்டு, சபை அமர்வு முடிவடைந்தது. குறித்த அமர்வில், சபையின் அனைத்து உறுப்பினர்களும் பங்கு பற்றியிருந்தனர்







